/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n320_0.jpg)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது.
இதனால் அதிமுகவின் கொடிகள், சின்னங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஓபிஎஸ் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
அதில் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, ‘மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நம்பர் ஆகிவிட்டது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம். குறுகிய கால அவகாசம் வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு பதில் மனு தாக்கல் செய்கிறோம்’ எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நான்கு ஐந்து மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. மக்களிடமும் கட்சியினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இதை ஏற்கக் கூடாது’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிவையற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத்தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனநீதிபதிகள் ஆர். மகாதேவன் முகமது ஷஃபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)