திருவண்ணமலை மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் சார்பில் 8 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட இந்த சிலையை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாகக் கூறி, பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால், திருவண்ணாமலை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிலையை திறந்து வைக்காமல் சென்றுவிட்டார்.
இந்நிலையில், பிப்.24 ம்தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் நகரில் இன்னும் வேறு சில இடங்களில் ஆள் உயர சிலைகள் திறக்க முடிவு செய்தனர். இதற்கும் அதிமுகவினர் எந்த அனுமதியும் பெறாததால் திமுக வழக்கறிஞர் அணியினர், சிலை திறப்பிற்கு அனுமதி வழங்கக்கூடாது, மீறினால் சட்டம் ஓழங்கு சீர் குழையும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் தெரிவித்தனர்
இந்நிலையில், இன்று காலை, பேருந்து நிலையத்தில் அருகே அமைக்கப்பட்டுள்ள சிலை முன்பு கூடிய அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியை சேர்ந்த 500 பேர், சிலையை இங்கிருந்து அகற்றக்கூடாது என கோரிக்கை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
- ராஜா