கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறைஞ்சி கிராமத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அரசு தொழிற்பேட்டை அமைப்பதற்காக விளை நிலங்களை அரசு கையகப்படுத்த அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். ஏற்கனவே இங்கே தொழில்பேட்டை உள்ள நிலையில் புதிய தொழில்பேட்டை அமைக்க இறைஞ்சி, ஆசனூர், கூந்தலூர், காச்சகுடி, குருபிடபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு சென்றனர்.
இதனை அறிந்த இறைஞ்சி, ஆசனூர், கூந்தலூர், காச்சகுடி, குருபிடபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விளை நிலங்களில் நின்று பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தாங்கள் இந்த விளை நிலங்களில் கரும்பு, தென்னை, பருத்தி மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், இந்த நிலங்களை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும் எனவும் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளும் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.