கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அடுத்த, பரவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிபெருமாநத்தம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது மணிமுக்தாறு. இங்கு தமிழக அரசு சார்பில் மணல் குவாரி ஆரம்பிக்க ஆற்றினை அளவீடு செய்ய அதிகாரிகள் வருகை தர உள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வீடு மற்றும் வீதிகள் முழுவதும் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதுமட்டுமில்லாமல் கச்சிபெருமாநத்தம், பரவளூர், மேமாத்தூர், ராசாபாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்துவரும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தடுப்பணை கட்டியதால், கடந்த ஒரு வருட காலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், தடுப்பணை கட்டப்பட்ட இடத்தில் மணல் குவாரி அமைப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அரசு மணல் குவாரி அமைக்கக் கூடாது என்றும், அவ்வாறு மணல் குவாரி அமைக்க முயற்சித்தால், கிராம மக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.