‘டெல்லியில் உரிமை கேட்டுப் போராடும் விவசாயிகளை அராஜக முறையில் அடக்க நினைக்கும் பாஜக மோடி அரசின் விவசாயிகள் விரோதச் செயலைக் கண்டித்தும் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஆதார விலையைச் சட்டமாக்க வேண்டும். மின்சார சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வேளாண் சட்டப் போராட்டத்தில் டெல்லியில் இறந்த 715 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.கே.எம் விவசாய சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்ட நோக்கங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் மக்கீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன், விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்வாணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “அமைதியான முறையில் விவசாயிகள் ஒரு ஆண்டு போராட்டத்தை நடத்தி உலகையே வியக்க வைத்தார்கள். அதன் அடிப்படையில் 3 அவசர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார் மோடி. அப்போது கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து விவசாயிகள் மீண்டும் வந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினாலும் காந்திய வழியில் போராடி வருகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் சாதாரண விஷயம் தான். வேளாண் விளைப் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சாமிநாதன் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான். இதனை மோடி அரசு பொருட்படுத்தாமல் விவசாயிகளை வீதியில் போராட வைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக ஆதார விலை மற்றும் சாமிநாதன் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். ஆனால் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த மோடியால் உறுதி அளிக்க முடியவில்லை.
டெல்லியில் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். அவர்களை பார்க்காமல் மோடி அபுதாபியில் நாராயண் கோயிலை திறந்து வைக்க போயிருக்கிறார். கோயில் திறப்பது அர்ச்சகர் வேலை அது பிரதமர் வேலை அல்ல. வீடு கிரகப் பிரவேசம் செய்வது போல், மோடி ஊர் ஊரா கோயில் கிரகப் பிரவேசம் செய்து வைக்கிறார். இது பிரதமருக்கு அழகு அல்ல. விவசாயிகளை வன்முறையாளர்களாகவோ, போராட்டக்காரர்களாகவோ அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியோ, கண்ணீர் புகை குண்டையோ பயன்படுத்துவது தவறு இதனை மோடி உணர வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி உள்ளார்கள். வங்கி கணக்கை முடக்கி காங்கிரஸ் கட்சியை அழிக்கலாம் என மோடி முடிவு செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம், வன்முறை நடைபெற்று வருகிறது. ராணுவ தளத்தில் இருந்து எடுத்துச் சென்ற 3 ஆயிரம் துப்பாக்கிகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார கும்பலிடம் உள்ளது. அதனை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பத்திரம் ரத்து என்ற மகத்தான தீர்ப்பு அனைவர் மத்தியில் வரவேற்பை அளித்துள்ளது” என்று கூறினார்.