Skip to main content

பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
opening of schools; Department of Transportation important instruction for students

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளைத் திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதில், “பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கூரைகளில் குப்பைகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடபட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்துத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், “பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. எனவே புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பேருந்துகளில் பயணிக்கலாம். அதாவது புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் தங்களுடைய பள்ளி அடையாள அட்டை மற்றும் பழைய பஸ் பாஸை காட்டி அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மாணவர் சேர்க்கை முடிந்தபின் கணக்கெடுத்து மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்