Skip to main content

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!

Published on 21/06/2020 | Edited on 21/06/2020
 Open water from the kallanai to the veeranam lake

 

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியை நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 40.38 அடி உள்ளது.

 

மேட்டூர் அணையை கடந்த 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக திறந்தார். இதனை தொடர்ந்து கல்லணையில் கடந்த 16ம் தேதி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் விநாடிக்கு 150 கன அடிவீதம் இன்று(21ம் தேதி) கீழணையை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த 150 கன அடி தண்ணீரை வடவாற்றில் திறந்துவிட்டு வீராணம் ஏரிக்கு அனுப்பி வருகின்றனர். இன்றும் ஒரு வாரத்தில் ஏரி நிரம்பும்  என்று கூறப்படுகிறது.

 

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், அணைக்கரை உதவிப்பொறியாளர் அருணகிரி ஆகியோர் கூறுகையில், கல்லணையில் இருந்து கீழணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி ஏரியை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கும், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிடவும் ஏரி நிரப்பப்படுகிறது. ஏரி நிரம்பிய பிறகு கீழணையில் தண்ணீர் தேக்கி வைத்து அதன் முழு கொள்ளளவான 9 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த உடன் கீழணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.