“Only one person is under treatment,” explained Minister Ramachandran

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “இன்று காலை ஒடிசாவில் இருந்து சென்னை வந்த பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. வருவாய்த்துறை மூலமாக உணவு, தண்ணீர் போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகசெவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்,10க்கும் மேற்பட்ட பேருந்துகள், அரசுப் பேருந்துகள், கட்டணமில்லா டாக்ஸிக்கள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. சென்னை வந்த பயணிகளில் 29 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவைப்பட்டது. அதில் 4 பேருக்கு காயங்கள் இருந்தது. அவர்கள் ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். ஒருவர் மட்டும் ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ளார்.

Advertisment

ஒடிசா ரயில் விபத்தில் 1091 பேர் விபத்தில் சிக்கியுள்ளார்கள்.அதில் 288 பேர் இறந்துள்ளதாக கூறியுள்ளார்கள். பலத்த காயமடைந்தவர்கள் 56 பேர். சாதாரண காயம் அடைந்தவர்கள் 747 பேர். இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் 70 பேர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உடன் சென்றவர்கள் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். 8 பேரை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்களது முகவரிகளை வாங்கி வீட்டிற்கு தொடர்பு கொண்டுசரி பார்க்க உள்ளோம். இன்று மதியமும் நாளை மதியமும் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு சிறப்பு ரயில் வர உள்ளது. அதில் வருபவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளையும் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறினார்.