/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3402.jpg)
தேனி மாவட்டத்தில் போதைக்காக பயன்படுத்தக் கூடிய மருந்துகளை பேருந்தில் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமதுமீரான், மாணிக்கம் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு ஊக்கமருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததோடு, அதிக லாபத்துக்காக இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சின்னமனூரைச் சேர்ந்த தங்கேஸ்வரன், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் மூலம் அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த ஜோனத்தன்மார்க் என்பவரிடம் இருந்து வாங்கி பேருந்தில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த ஜோனத் தன்மார்க் என்பவரிடம் ஆன்லைன் மூலம் போதை தரக் கூடிய மருந்துகளை கொள்முதல் செய்து அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜோனத்தன் மார்க்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து க்ரீன் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து பிங்க் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், புனேயில் ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து ஆரஞ்ச் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும் கொள்முதல் செய்து அதனை உறவினர்களுக்கு மருந்துகள் அனுப்புவதாக சொல்லி பேருந்துகளில் அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1094.jpg)
இவ்வாறு தமிழகத்தில் சென்னை, ஒசூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான கேரளாவின் பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு உதவியாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த வினோதினி என்ற பெண் உதவியாளராக திருச்சியில் பணிபுரிந்து வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரிடம் போதைக்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த வரையறைக்கு உட்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள் ஏராளமானவை கைப்பற்றப்பட்டதோடு ஜோனத்தன் மார்க்கின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜோனத்தன்மார்க், அவரது உதவியாளர் வினோதினி மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமதுமீரான், மாணிக்கம், தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோரைகைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)