/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2888.jpg)
ஆன்லைன் லோன் என்கிற பெயரில் ஆபாசப் புகைப்படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ்தீன். இவர், பாஜக மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளராகவும், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நலச் சங்கஉறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கடன் செயலி (Loan app New case) மூலம் கடன் பெற தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அளித்திருக்கிறார். ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், பணம் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இந்த நிலையில், திடீரென அவரது செல்போனுக்கு அந்தச் செயலி மூலம் ஒரு அழைப்பு வந்திருக்கிறது.
அதில் "தாங்கள் வாங்கிய கடனை உடனே திரும்பச் செலுத்த வேண்டும்" எனக் கேட்டுள்ளனர். ரியாசுதீனோ" நீங்க இன்னும் லோன் கொடுக்கவே இல்ல, பிறகு எப்படி நான் பணம் திரும்ப செலுத்தமுடியும்" எனக் கூறியுள்ளார்.
அத்தோடு முடிந்துவிட்டது என்றிருந்த நிலையில், ரியாசுதின் படத்தை 'மார்பிங்' செய்து ஆடைகளற்று இருப்பது போல அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் முகமது ரியாசுதீனை தொடர்பு கொண்டு, உடனடியாக பணத்தைச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும், உங்கள் செல்போன் காண்டாக்ட் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ரியாசுதீன் பணம் கொடுக்காததால், அவர் செல்போனில் இருந்த நம்பர்கள் அனைத்திற்கும் ரியாசுதீனின் படத்தை மாப்பிங் செய்து ஆபாசமான படங்களை அனுப்பி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரியாசுதீன் இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷாவிடமும், சீர்காழி காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
இதுகுறித்து ரியாசுதின் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தற்போது தெரியவருகிறது. தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதுபோன்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை விரைவாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களைப் பெற்ற சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் லோன் மோசடி கும்பலைத்தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)