தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்டங்கள் வகை 1, 2, 3 என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தமுறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. அதிகப்படியான மாணவர்கள் செல்ஃபோன் மூலமாகவே ஆன்லைன் கல்வி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செல்ஃபோன் டவர் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிப்படுகின்ற செய்தி நேற்று (04.07.2021) வெளியாகியிருந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெரியகோம்பை, பரப்பன்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அப்பகுதிகளில் போதிய அளவில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காததால் சிக்னலுக்காக ஊரில் உள்ள ஆலமரங்களில் ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் பாடம் கற்றுவருகின்றனர். தங்களது கிராமத்திற்கு செல்ஃபோன் டவர் அமைத்துத் தருமாறு மாணவர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
“தினமும் வகுப்பிற்கு வர வேண்டியிருக்கிறது. மழை நேரங்களில் பயமாக இருக்கிறது. செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத காரணங்களால் ஆன்லைன் வகுப்புகளை அட்டெண்ட் செய்ய முடியவில்லை, அப்படி அட்டெண்ட் செய்யமுடியாத நிலையில் வருகைப் பதிவேடு பாழாகிறது. வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அதனால் செல்ஃபோன் டவர் அமைத்துக் கொடுத்தால் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என கோரிக்கை வைத்திருந்தனர் கிராமப்புற மாணவர்கள்.
இந்நிலையில், டவர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், பிஎஸ்என்எல் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் டவர் அமைப்பது குறித்து பேசிவருவதாக தெரிவித்துள்ளார்.