அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது தொடர்ந்து பேசி வந்தார்.
இதையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், “2024 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர். 2024ல் பாஜகவை வீழ்த்த ஒன்று கூடிப் பேசி உள்ளனர். 2014 மற்றும் 2019 இல் இப்படிப்பட்ட நிலைமை வரவில்லை. 3ல் ஒரு பங்கு வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.