திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டி அருகே தனியார் நர்ஸிங் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளைத் தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை செய்துவருவதாகக் கூறி கல்லூரியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாளாளர் ஜோதி முருகனையும், வார்டன் அர்ச்சனாவையும் கைது செய்யக் கோரி வலியுறுத்தினார்கள்.
அதனடிப்படையில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மற்றும் வார்டன் அர்ச்சனா மீது கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவிகள் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர். ஆனால், தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 5 தனிப்படைகளை எஸ்.பி. சீனிவாசன் அமைத்ததன் பேரில், போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில்தான், அதே தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் நேற்று (22.11.2021) இக்கல்லூரியில் படித்த பழைய மாணவி ராஜலட்சுமி மூன்றாவது நபராக தாளாளர் ஜோதிமுருகன் மீதும் வார்டன் அர்ச்சனா மீதும் பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.
அதனடிப்படையில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதோடு மூன்று மாணவிகள் ஜோதிமுருகன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் போலீசார் ஜோதி முருகனை வலைவீசித் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த போலீசார், ஜோதி முருகனுடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். அதனால் கூடிய விரைவில் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு பரவலாக இருந்துவருகிறது.