தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் அருகிலுள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்த மாடசாமியின் மனைவி முத்துமாரி (39). கருத்து மோதல் காரணமாக கணவரைப் பிரிந்த முத்துமாரி தன் இரண்டு பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியே வசித்து வருகிறார். இந்தச் சூழலில் இவருக்கும் பக்கமுள்ள வடநத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (49) என்கிற கூலித் தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நெருக்கமாகி திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளைக் கொண்டிருக்கும் சசிகுமார், முத்துமாரியைத் தேடி நொச்சிகுளம் வந்து அவருடன் தனிமையில் இருந்துவிட்டு செல்வார் எனச் சொல்லப்படுகிறது. இதில், முத்துமாரி 2018ல் கர்ப்பமானார். அது சமயம் பிறந்த குழந்தையை எவருக்கும் தெரியாமல் பக்கத்து பகுதியிலுள்ள குளக்கரையில் வீசி விட்டனர்.
பொது மக்களின் தகவலால் 2018ல் சிசுவின் உடலை மீட்ட சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர். பலனின்றிப் போகவே வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நிலுவையிலிருக்கும் இந்த வழக்கு உள்பட பிற வழக்கு நாட்பட்ட வழக்குகளையும் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜ். இதையடுத்து கடந்த சில தினங்களாக குளக்கரையில் கிடந்த பிறந்த குழந்தையின் சடலம் பற்றிய விசாரணையைக் கிளப்பிய சேர்ந்தமரம் போலீசாருக்கு பொது மக்கள் தரப்பிலிருந்தே தகவல்கள் கிடைத்தன. 2 பிள்ளைகளுடன் வசித்த முத்துமாரி நிறைமாத கர்ப்பிணியாக இரண்டுமுறை வலம் வந்தவரின் குழந்தை என்னவானது எங்கே, என கிராமத்தினர் சந்தேகப்பட்ட நேரத்தில் ஊரைக் காலி செய்த முத்துமாரி வேறு பகுதியில் வசித்தவர், சசிகுமாருடனான தொடர்பிலிருந்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. சேர்ந்தமரம் போலீசார் சசிகுமாருடன் வேறு பகுதியில் வசித்து வந்த முத்துமாரி இருவரையும் பிடித்து முறையாக விசாரித்தனர்.
அது சமயம் தான், வெல வெலக்க வைக்கிற வேறு தகவலும் கிடைக்க போலீசார் ஆடிப்போனார்கள்.
‘என்னோட கணவரைப் பிரிந்து வாழ்ந்த போது சசிகுமாருடன் ஏற்பட்ட தொடர்பு பழக்கத்தால் 2018ம் வருஷம் குழந்தை பிறந்தது. வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் பிறந்து 5 நாளேயான அந்தக் குழந்தையைக் கொன்று பக்கத்து கிராமத்தின் குளக்கரையில் ராவோடு ராவா வீசினோம். அதன் பிறகும் எங்கள் தொடர்பு நீடித்தது. அதைப் போலவே 2019ம் ஆண்டு பிறந்த மற்றொரு ஆண் குழந்தையை கொன்று நொச்சிகுளத்திலுள்ள வீட்டிற்கு அருகே யாருக்கும் தெரியாமல் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்’ என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு விக்கித்துப் போயினர் போலீசார்.
ஒரு கேசை விசாரிக்கப் போனா உபரியா இன்னொரு சிசுக்கொலையா என்று அரண்டு போன விசாரணை அதிகாரிகள், முத்துமாரி, சசிகுமார் இருவரையும் கைது செய்தனர்.
இதன் பின் நேற்றைய தினம் கடையநல்லூர் தாசில்தார், அரவிந்தன் இன்ஸ்பெக்டர், விஜயகுமார் எஸ்.ஐ., வேல்பாண்டின் சுகாதரத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் கைதானவர்கள் காட்டிய இடத்தை ஜே.சி.பி. உதவியுடன் தோண்டி எடுத்து குழந்தையின் எலும்புக்கூட்டைக் கைப்பற்றி ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சேர்ந்தமரம் போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் உடலுறுப்புகள் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்துப்படும் என்கிறார்கள் சேர்ந்தமரம் போலீசார்.