ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய நீலகிரியில் செப்டம்பர் 16 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். சென்னையில் செப்டம்பர் இரண்டாம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா இன்று இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. எப்பொழுதுமே செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை என்ற நிலையில் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று மதுரை மற்றும் குமரி பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய்க்கும், மல்லிகைப் பூ 800 ரூபாய்க்கும், வெள்ளை கேந்தி கிலோ 350 ரூபாய்க்கும், சிவப்பு கேந்தி கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ரோஜா பூ கிலோ 170 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 400 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், மஞ்சள் கேந்தி கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முல்லைப் பூ கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 400 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.