ஓமிக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (29/11/2021) மதியம் 12.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் ஓமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதனிடையே, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.