சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனச்சரகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடல் ஆமை முட்டைகள் சேகரம் செய்து செயற்கை பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சுகள் பொறித்தவுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆமை முட்டைகளை பிச்சாவரம் மாங்குரோவ் காட்டினை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் செயற்கை ஆமை முட்டைகள் பொறிப்பகம் அமைத்து அப்பகுதிகளில் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டதில் முட்டையில் பொறிந்து குஞ்சுகள் வெளியே வருவதை கடலில் பாதுகாப்பாக விடும் நிகழ்சி திங்களன்று நடைபெற்றது.
இதில் 2,137 குஞ்சுகள் வெளியே வந்ததை பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலையில் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவர் ராமநாதன் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ, கடலூர் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணரும் இயற்கை ஆர்வலருமான இளந்திரையன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, பிச்சாவரம் வனச்சரக வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர் ராஜேஷ்குமார், வனப்பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆமைக் குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
இதுவரை பிச்சாவரம் வனச்சரகத்தில் 35,412 ஆமை முட்டைகள் சேகரம் செய்து அதில் 8,961 குஞ்சு பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் வரை குஞ்சுகள் பொறிந்து கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கடலில் மீன் வளத்தை அழிக்கக்கூடிய ஜெல்லி வகை மீன்களை அழிக்கக் கூடியது. எனவே கடலில் ஜல்லி வகை மீன்கள் அதிக அளவு பெருகிவிட்டால் மீன்கள் கடலில் இருக்காது. அதனால் ஆண்டு தோறும் இந்த ஆமைக் குஞ்சுகளை அதிக அளவில் கடலில் விடும் நிகழ்ச்சி வனத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு முட்டையில் இருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சு அடுத்த ஆண்டு இதே நேரத்தில் அதே இடத்தை தேடி வந்து முட்டையிட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.