சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நிர்வாக ரீதியாக கலந்துரையாடி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக நியாயவிலை கடையை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தை வரவேற்கிறோம். அதேவேளையில் மாவட்ட ஆட்சியர்கள் வழங்கப்படும் அரிசி போன்ற பொருட்கள் ஆலையிலிருந்து குடோன்களுக்கு வரும்போதும், குடோன்களில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு வரும்போதும் ஆய்வு செய்வது சிறந்ததாகும். இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பிக்க வேண்டும். இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும். மேல்மட்டத்திலிருந்து தொடங்கக்கூடிய குறைகளை அனுமதித்துவிட்டு கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர்களை மட்டும் ஆய்வு செய்வதை ஏற்க இயலாது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியாரின் நிர்வாகத்திலிருந்தபோது தேவைக்கு அதிகமான பணியாளர்கள், ஆசிரியர்கள் நியமனம் செய்தார்கள். அதன் விளைவாக நிதிச் சிக்கல் ஏற்பட்டு அரசே பல்கலைக்கழகத்தை அரசுடமை ஆக்கியது. அதில் பணியாற்றி வந்த ஆசிரியர்களையும், பணியாளர்களையும் தேவைக்கு அதிகமாக இருந்தவர்களை இதர அரசு கல்லூரிகளில் அரசு துறைகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிமாற்றம் செய்யப்பட்ட பணியாளர்கள் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எந்தெந்தத் துறைகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள், பணியாற்றுகிறார்களோ அதே துறைகளில் பணி நிரந்தரம் செய்து பதவி உயர்வுகளையும் மற்ற சலுகைகளும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பினால் விருப்பத்தின் பெயரில் அவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்த மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும் ''வரும் 17ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி பணியாளர்கள் இணைந்து முடிவு செய்து அதன் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து வலியுறுத்த உள்ளோம்'' என்றார். இவருடன் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.