
தென்காசி நகரின் மையப் பகுதியில் முதியவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் பேருந்து ஏறுவதற்காக ராமநாதன் என்ற முதியவர் சென்று கொண்டு இருந்துள்ளார். அவரிடம் மூன்று இளைஞர்கள் வந்து முகவரி ஒன்றை கேட்டுள்ளனர். முதியவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மூன்று இளைஞர்களும் ராமநாதன் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ராமநாதன் தென்காசியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். தொடர் விசாரணையில் சிசிடிவி காட்சிகளின் உதவியைக் கொண்டு வழிப்பறி செய்த மூவரிடம் இருந்தும் சங்கிலியை மீட்டுள்ளனர்.