Skip to main content

மூன்று நாட்களாக பசி மயக்கத்தில் கிடந்த முதியவர்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

The old man was starving for three days

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மேலபூவாணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள உறவினரை தேடி வந்திருக்கிறார். அங்கு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே அதன் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று இருக்கிறார். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இங்கேயே சிகிச்சையில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஆனால் அவர், சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். 


மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரால் மேற்கொண்டு நடந்து செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு எதிரே இருந்த ஒரு மரத்தடியில் படுத்து கிடந்துள்ளார். மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு அருந்தாமல் அதே இடத்தில் கிடந்துள்ளார். இந்த நிலையில் தற்செயலாக அவரது நிலையை பார்த்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் அவருக்கு உதவி செய்து அவரை தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினர்களை தேடி தகவல் கொடுக்குமாறு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தின் மூலமாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கவனிப்பார் இன்றி கிடந்த முதியவருக்கு உதவி செய்து மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.