Skip to main content

மூதாட்டி கொலை... பள்ளி மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு 

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது மேலக்கல் பூண்டி. இந்த ஊரை சேர்ந்த ஐயாசாமி மனைவி பொன்னம்மாள். வயது 65. இவர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பொன்னம்மாளை உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 

old lady



அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் இறந்துபோனார். உடனே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியை சேர்ந்த பலரையும் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.
 

இந்த நிலையில் வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம், ''பாட்டியை கொலை செய்தது நான்தான்'' என்று ஒப்புக்கொண்டு ஒரு பள்ளி மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் அந்த பள்ளி மாணவனை கைது செய்து விசாரித்தபோது, அவன் அளித்த வாக்குமூலத்தில் பாட்டி பொன்னம்மாளின் வீட்டின் அருகில் கிழக்கில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொன்னம்மாள் தன் தோட்டத்தில் விளையும் பலவிதமான பழங்களை விற்பனை செய்வது வழக்கம். அதனால் பொன்னம்மாள் வீட்டிருக்கு நிறைய பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது சென்று வருவது உண்டு.
 

சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஒருவன் அந்த பாட்டியிடம் பழம் வாங்கி கொண்டு அதற்குப் பதிலாக வெளிநாட்டு கரன்சி பணத்தைக் கொடுத்துள்ளான். விவரம் தெரியாமல் பணத்தை வாங்கிய பாட்டி பிறகு அதை மற்றவரிடம் காட்டியபோது அது வெளிநாட்டு பணம் இங்கு செல்லாது என சொன்னதும் கோபத்துடன் அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்ற பாட்டி, சம்பந்தப்பட்ட மாணவனிடம் என்னை ஏமாற்ற பார்த்தாயா என அவனை பலர் முன்னிலையில் கேட்டுள்ளார். 
 

பாட்டி தன்னை திட்டியதை மாணவன் அவமானமாகக் கருதினான். பாட்டியிடம் பணப்புழக்கம் உள்ளதை பார்த்துள்ளான். தன் தாயிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளான். அவர் தர மறுத்துள்ளார். இதனால் பாட்டி மீது உள்ள கோபத்திலும், தாய் செலவுக்கு பணம் தாராததாலும் பாட்டியிடம் உள்ள பணத்தை திருடுவது என  திட்டமிட்டு, அதன்படி ஒன்றாம் தேதி இரவு அந்த பாட்டி வீட்டருகே சென்றவன், நடு இரவில் வீட்டுக்குள் சென்று பாட்டி வைத்திருந்த பணத்தையும் செல்போனையும் திருடியுள்ளான். 


 

 

சத்தம் கேட்டு எழுந்த பாட்டி பொன்னம்மாள் அந்த மாணவனை கையும் களவுமாக பிடித்து விட்டார். சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்க முயலும்போது கோபமுற்ற சிறுவன், பாட்டி தன்னை காட்டிகொடுத்து விடுவாரோ என அச்சமடைந்து, அருகில் கிடந்த டார்ச் லைட்டை எடுத்து பாட்டியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.


 

 

பாட்டி ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்ததும் சிறுவன் பணத்தையும் பாட்டியின் செல்போனையும் எடுத்து கொண்டு சத்தமில்லாமல் சென்றுவிட்டான். இந்த நிலையில் போலீசார் பாட்டியோட செல்போன் பற்றி கண்டறிய டவரை வைத்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த செல்போன் அந்த மாணவனின் தாயிடம் இருப்பதை கண்டறிந்தனர். அவரை 'அழைத்து கடுமையாக விசாரித்தனர் அப்போது வேறு வழியில்லாமல் மாணவன் தானே முன்வந்து பாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்த  போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அந்த சிறுவனை அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்