கடலூர் மாவட்டம், வேப்பூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாலன் என்பவரது மனைவி பட்டத்தாள்(75). இவர், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 6ஆம் தேதி மாலை இவரது மகள் பார்வதி தனது தாயார் பட்டத்தாளை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பட்டத்தாள் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின் மற்றும் ஒரு பவுன் வளையல் ஆகியவற்றை காணவில்லை. மேலும் இறந்து கிடந்த அவரது கழுத்தில் காயம் இருந்துள்ளது. இது குறித்து பார்வதி, தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேப்பூரில் உள்ள அடகுக் கடையில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊர் தெற்கு தெருவைச் சேர்ந்த சூர்யா (21) என்பவர் கடந்த 6ம் தேதி 95 ஆயிரத்திற்கு நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சூர்யாவை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வரும் சூர்யா, தனியாக வீட்டில் இருந்த பட்டத்தாளிடம் நகைகளை பறிக்க முயன்ற போது பட்டத்தாள் தடுத்து போராடியதால் அவரது முகத்தைக் கையால் மூடிக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை பரித்து சென்றதை சூர்யா ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நகைகளை அடகு கடையில் வைத்து பணமாக்கியதும் உறுதி செய்யப்பட்டது.
அது குறித்து சூர்யா மேலும் கூறும்போது, " தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த காதலி மொபைல் போன் வாங்கித் தருமாறு கேட்டார். இந்த பணத்தில் அவருக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்தேன்" என்றார். மேலும் காதலியுடன் திருச்சியில் தனியார் விடுதியில் அறை எடுத்து 5 மாதம் தனியாக தங்கி இருப்பதற்காக அட்வான்ஸ் பணம் செலுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.