புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் கருக்காக்குறிச்சி தெற்கு ஊராட்சியில் இருந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்திருந்ததால் புதிய அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் பரிமளம் என்பவர் ஒப்பந்தம் பெற்று பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டத் தொடங்கிய போது அருகில் உள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அளவை செய்த பிறகு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கட்டுமானப் பணியை நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் கடிதத்தில் கேட்டதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மழையூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி (43) மற்றும் கருமேல வட்ட கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், அரசு ஒப்பந்தக்காரர் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வடகாடு போலீசார் பாதுகாப்புடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான நிலத்தை அளவை செய்ய தயாராகினர். அப்போது அங்கு வந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் தங்கையா மகன் பரிமளம் மற்றும் சின்னத்தம்பி மகன் நாராயணன், நாராயணன் மகன் தியாகராஜன், சுப்பையா மகன் சதீஷ் மற்றும் அவர்களுடன் வந்திருந்த நபர்கள் எங்கள் பட்டா நிலம் ஊராட்சி நிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று ஊராட்சி நிலத்தை அளவை செய்ய விடாமல் தடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் பேசியதுடன் ஒப்பந்தக்காரர் தரப்புடன் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் அளவைப் பணி நிறுத்தப்பட்டது.
இதனால் அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மழையூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் குறித்து வடகாடு போலீஸ் வைஸ் சேர்மன் பரிமளம் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அரசு ஒப்பந்தக்காரர் பரிமளமும் வைஸ் சேர்மன் தரப்பினர் மீது புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வைஸ் சேர்மன் பரிமளம் கடந்த காலங்களில் மது விற்பனை செய்வதை பிடிக்கச் சென்ற போலீசாரை தாக்க முயன்றதாகப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.