Skip to main content

100 நாள் வேலை; பெண்களை மிரட்டும் அதிகாரிகள்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Officials threaten women with 100-day work

 

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

 

இத்தகைய சூழலில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது வேளஞ்சேரி ஊராட்சி. வேளஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரியில் நான்கு ஐந்து அடி ஆழத்தில் தண்ணீருக்குள் நடந்து சென்று ஆபத்தான பகுதியில் வேலை செய்ய வைப்பதாகப் பணி செய்யும் பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் இப்படி ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று வேலை செய்யும்பொழுது சில நேரத்தில் பாம்புகள் கூட கடிப்பதாகக் கூறுகின்றனர்.  அதுமட்டுமின்றி, எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து உயிர் போகும் நிலை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். 

 

அதே நேரம் இந்த பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஏரியைக் கடந்து தான் பணிகளை ஒதுக்குவதாகவும் தங்களை அங்குதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவதாகப் பகிரங்கமான குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இங்கு நடக்கும் அவலங்கள் குறித்து டிவியிலோ மீடியாக்களிலோ பேட்டி கொடுத்தால் உங்களை அடுத்த நாளே 100 நாள் வேலையில் இருந்து துரத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இந்த அவலத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். 

 

Officials threaten women with 100-day work

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படி பெண்களை அடிமை போல் திருத்தணி வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆபத்தான முறையில் பணி செய்ய வைக்க வேண்டுமா? வேறு எங்கும் பணிகள் இவர்களுக்கு ஒதுக்க முடியாதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 100 நாள் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் நடக்கும் அசம்பாவித பணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 27 பஞ்சாயத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நூறு நாள் வேலை பார்த்த இடத்தில் மண்வெட்டி சண்டை - மருமகனைத் தாக்கிய மாமியார்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Mother-in-law who attacked her son-in-law in a spade fight where she worked for 100 days

 

சிவகாசி தாலுகா – எம்.புதுப்பட்டி–மங்கலம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு  ராஜகுமாரியின் மகள் பவானியுடன்  திருமணம் நடந்தது.  கருத்து வேறுபாட்டினால் சத்தியமூர்த்தியிடமிருந்து பிரிந்த பவானி, தனது மகள் ஜெஷிகாவுடன் அம்மா வீட்டில் வசித்துவருகிறார். மாரியம்மன் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில், பேத்தி ஜெஷிகாவை அருகில் வைத்துக்கொண்டு ராஜகுமாரி நூறு நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு சத்தியமூர்த்தி சென்றபோது, அவரைப் பார்த்து அப்பா என்று கூப்பிட்டிருக்கிறார் ஜெஷிகா. இதைப் பார்த்து எரிச்சலான ராஜகுமாரி திட்டியிருக்கிறார். அதனால், சத்தியமூர்த்திக்கும் ராஜகுமாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஒருகட்டத்தில் ராஜகுமாரி ஆவேசமடைந்து தன் கையிலிருந்த மண்வெட்டியால் சத்தியமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார்.  அப்போது இன்னொரு உறவினரான குருவம்மாளும் தான் வைத்திருந்த மண்வெட்டியின் மரக்கட்டையால் சத்தியமூர்த்தியை மாறி மாறி அடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டபோது ராஜகுமாரியும் குருவம்மாளும் மண்வெட்டியைக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

தலையில் ஏற்பட்ட ரத்தக்காயத்துக்கு எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற சத்தியமூர்த்தி, அடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், எம்.புதுப்பட்டி காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். ராஜகுமாரி மற்றும் குருவம்மாள் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது.  

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

350 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு; வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 

விழாவில் ஒருங்கிணைந்த திட்ட வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் த.பழனி வரவேற்றார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்துப் பேசினார். 

 

விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து 350 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை உள்ளிட்ட சீர்வரிசை மற்றும் தலா ஊக்கத் தொகை ரூ.500 வழங்கி சிறப்புரையாற்றி பேசுகையில், “குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது அல்லது வயதிற்கேற்ற உயரத்துடன் வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கிய குறைபாட்டுடன் வேலை செய்யும் திறன் குறைந்தவர்காளாக இருப்பார்கள்.

 

 mrk panneerselvam participated in a community baby shower for 350 pregnant women

 

இதனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி தாயும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை. ஊட்டச்சத்து உணவு முறை, மருத்துவ பரிசோதனைகளின் அவசியத்தை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

ஏழை எளிய பெண்கள் தங்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் கவலை கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு தாயுள்ளத்தோடு ஒவ்வொரு ஆண்டும் வளைகாப்பு விழா நடத்துகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 1400 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

 

விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் ம. சிந்தனைசெல்வன், சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமார், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிரியன் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர். பாலமுருகன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த. ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி. மணிகண்டன், லதா, கல்பனா, மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர் பா. பாலசுப்பிரமணியன், ஆர். இளங்கோ, இளைஞரணி மக்கள் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரப்பாளையம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோ. செல்வமணி நன்றி கூறினார். விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்