Skip to main content

நீதிமன்ற உத்தரவு; கோவில், கடைகளை இடித்து தரமட்டமாக்கிய அதிகாரிகள்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Officials demolish the temple as per the court order

கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்தினர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம் என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.

அகற்றாத கட்டங்களை கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் தர்ம சாஸ்தா கோவிலை அகற்றுவது தொடர்பாக நேற்று கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஜீன் 1 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள பாசன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அகற்றுவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி கோவில் நிர்வாகத்தினர் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதன் பிறகு கோவிலில் உள்ள சிலைகளை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அகற்றம் செய்யப்பட்டு பழைய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா; டன் கணக்கில் குவிந்த பூக்கள்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (14.07.2024) பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர்.

அதே போலச் செண்டை மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. 

Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

அதன்படி வரும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.