Skip to main content

"ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும்"- முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி அதிரடி! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

"OBS-EPS should resign" - Former MLA Sixth Action!

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று (16/06/2021) இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த போட்டியால் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகாரமானது. ஒற்றைத் தலைமை பிரச்சனையை உருவாக்கியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரைக் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்" என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆரணியில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டுள்ளார். 

 

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, "தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி சண்டையிட்டுக் கொள்வது சரியல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தொண்டர்களைக் கேட்டா ஏற்படுத்தினார்கள்? அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒதுங்க வேண்டும். பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸுக்கு பதிலாக வேறு யாராவது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வந்தால் பரவாயில்லை. அ.தி.மு.க. பின்னடைவைச் சந்தித்துள்ள நேரத்தில் கோஷ்டி சேர்ந்துக் கொள்வது சரியல்ல. 

 

இப்படியே சென்றால் மீண்டும் பழையபடி கட்சி இரண்டாக உடையும் சூழல் ஏற்படும். எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சியில் இருந்த நிர்வாகிகளை நீக்குவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய நிலைமை வந்திருக்குமா? தொண்டர்கள் நொந்து நூலாகி போய் கிடக்கின்றனர். கட்சியை நன்றாகக் கொண்டு வருவார்கள் என்று நினைத்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். ஓ.பி.எஸும்- ஈ.பி.எஸும் கட்சியில் கோஷ்டி அரசியலை நடத்தி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்