தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவுக்கு அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம் இன்று (11/10/2022) கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் அ.தி.மு.க.க்குள் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அந்த வகையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். மேலும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 17- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் கூடுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க. சார்ந்த எந்த முடிவை எடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.