திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டி அருகே தனியாருக்குச் சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேட்டை நாய் என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். மேலும் 10 படங்களில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ராமபிரபா கலைக்கல்லூரி, கவி பாலிடெக்னிக், சுரபி கேட்டரிங் காலேஜ் நடத்தி வருகிறார்.
சுரபி நர்சிங் கல்லூரியில் இருபாலரும் சேர்ந்து சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே சொல்ல முடியாமலும் பெற்றோரிடம் சொல்ல முடியாமலும் மாணவிகள் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தாக்கினர். மேலும் கல்லூரி தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 300க்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்யும் வரை மறியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கல்வி பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறி திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் திண்டுக்கல் காவல்துறை டிஐஜி விஜயலட்சுமி ஆகியோர் கல்லூரியில் தங்கியுள்ள மாணவிகள் அவர்களது பெற்றோரிடம் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாளாளர் ஜோதிமுருகன் விரைவில் கைது செய்யப்படுவார், அதன்பின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு விசாரணை குழு அமைத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி லதா மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர் தரப்பினர் தங்களது ஊர்களுக்கு செல்ல முன்வந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு அரசு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து மேலும் ஒவ்வொரு வகுப்பறையும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் வகுப்பறைகள் சீல் வைக்கப்பட்டது. இது தனியார் கல்லூரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.