ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிந்திருந்தாலும் அங்கு நடைபெற்ற பிரச்சாரத்தின் சூடு தற்போது வரை குறையாமல் இருந்து வருகிறது. நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனைத்துக் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வந்தேறி எனப் பேசியிருந்தார். இதற்கு அப்போதே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. மேலும், பல அரசியல் கட்சிகளும் சீமானின் இந்தப் பேச்சை கண்டித்து போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில், குறிப்பிட்ட சமூகத்தை வந்தேறி எனக் கூறிய சீமானைக் கண்டித்து மார்ச் 6 ஆம் தேதி நாம் தமிழர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் கு.ஜக்கையன் அறிவித்திருந்தார். அந்த வகையில், இன்று போரூர் சாலையில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டக்காரர்களை தடுத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி கூறிய நிலையில், ஆதித்தமிழர் பேரவையினர் வேறுவழியாக நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நுழையவே, அலுவலகத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை நாம் தமிழர் கட்சியினர் அடித்து விரட்டினர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பினரையும் கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது இந்தப் பிரச்சனையால் அந்த சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.