/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ntk-manaparai-arunakiri-art.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சோழியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் கடந்த ஒன்றை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி (14.09.2024) வீட்டைவிட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள மதுரைக்குச் சென்று உள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்து மாயமாகிய பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும், வழக்கறிஞராகவும் இருந்து வருபவரும், மாணவியின் அண்ணன் முறை உறவினருமான அருணகிரி என்பவர் தனது நண்பர்களுடன் மதுரைக்குச் சென்று காதலர்களை கடத்தி வந்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே சந்தோஷை கடுமையாகத் தாக்கி மோகினி மலை என்றை இடத்தில் இறக்கி விட்டுவிட்டு, கல்லூரி மாணவியை தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்குச் சிகிச்சை பெற்று வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ins-art_8.jpg)
மேலும் சந்தோஷிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும், அருணகிரி பறித்துக் கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. அதோடு சந்தோஷ் வீட்டிற்குச் சென்றும் அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் வாக்குமூலம் பெற்று நா.த.க. நிர்வாகியான அருணகிரி மற்றும் அவரது நண்பர்களான கார்த்தி, பிரவீன் ஆகிய 3 பேரின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப் பொறுப்பு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரைக் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நா.த.க. சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டவர் அருணகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)