பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வரும் நவ்.1 ஆம் தேதி தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பல வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் பள்ளி திறப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து வந்தார். அதேபோல் வரும் நவ்.1 ஆம் தேதி தமிழகத்தில் மழலையர் பள்ளிகள், எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் திறப்பு இல்லை. அதுகுறித்து தமிழக அரசு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தியிருந்தது.
இந்நிலையில் நவ்.1 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது உறுதி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு முழுநேரம் செயல்படுவதைப்போல 1 முதல் 8 ஆம் வகுப்புக்கும் முழுநேரம் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் சில விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், காலையிலிருந்து மாலை வரை பள்ளி வழக்கம்போல செயல்படும். சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும். ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒரு வகுப்பு நடைபெற வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமல்ல. பெற்றோர் விருப்பப்படி முடிவெடுக்கலாம். ஆன்லைன் கல்வி தேவைப்படுவோர் அதிலேயே தொடர்ந்து கற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.