மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை விரைவில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டுள்ளது.
தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வயது, அனுபவம் ஆகியவை அடிப்படையில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். விருப்ப ஓய்வு பெறும் பட்சத்தில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் மற்றும் கருணைத்தொகை மட்டுமல்லாது அனைத்து வகையான பலாபலன்களையும் கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அழைப்பை நோட்டீஸ் வாயிலாக தோட்ட தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் விடுத்துள்ளது. விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன் 14ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.