
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக,18/07/2022 முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று தமிழகத்தில் சுமார் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்தின் அறிவிப்பை மீறி விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் இயக்குநரகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது பற்றி பதில் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கத்தை கேட்ட பின் இந்த 987 பள்ளிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.