ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக பல்வேறு தற்கொலை நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் செய்தது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக தமிழக முதல்வரையும் சந்தித்தோம். சட்டமன்றத்திலும் எங்களது உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் தமிழக அரசு ஒரு உயர்நிலைக் குழு ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைத்தது. அந்த குழு இரண்டு வாரங்களில் பரிந்துரை வழங்க வேண்டும் என அறிவித்திருந்தது. அந்த குழுவும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரை கொடுத்தார்கள். அப்படி பரிந்துரை கொடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில் தமிழக அரசு பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்கின்றோம் என்று ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவை தான் இன்று சந்தித்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தி இருக்கின்றேன். நிச்சயமாக இனியும் தாமதப்படுத்தக் கூடாது. பல உயிர்கள் சம்பந்தமான ஒரு பிரச்சனை. இது மட்டுமல்ல ஆன்லைன் சூதாட்டத்தால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள மக்களுடைய பணம் ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பல செலிபிரிட்டிகள் பரிந்துரை எல்லாம் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் தவறு. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களை முதல்வர் காப்பாற்ற வேண்டும். இனியும் ஒரு உயிரை இதனால் இழக்கக்கூடாது. சரத்குமார் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஆன்லைன் சூதாட்டம் என்பது பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்திருக்கிறது. 70 உயிர்களை எடுத்து இருக்கிறது. இன்னும் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இதற்கு எந்த விளம்பரமும் கொடுக்கக் கூடாது. அதேபோல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.