kitnap

தமிழகம் முழுவதும் வடமாநில திருடர்கள் இறங்கி உள்ளதாகவும் அவர்கள் குழந்தை கடத்தல், திருட்டு, கற்பழிப்பு, கொலை போன்ற கொடுர செயல்களில் ஈடுபடுவதாகவும் பரவிய தகவல்களால் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடத்து வருகிறது. அதே போல புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் கடந்த சில நாட்களாக சமூக வளைதளங்களில் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் வடமாநில கொள்ளையர்கள் இறங்கியுள்ளனர் என்றும் அப்பகுதியில் உள்ள தைல மரக்காடுகளில் மறைந்திருந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்றும் தகவல்கள் பரவி வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த கிராமமான ராப்பூசல் கிராமத்தில் இரு வடமாநில இளைஞர்கள் திருட முயன்ற போது பிடிபட்டதாக கூறப்பட்டது.

Advertisment

இதனால் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வியாபாரத்திற்காக வரும்பொழுது அவர்கள் மீது சந்தேகத்துடன் பார்க்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக மகாராஸ்டிரா பதிவு எண் கொண்ட டெம்போ டிராவலர் வேன் ஒன்று விராலிமலையை நோக்கி சென்றுள்ளது. அந்த வேனை வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டியுள்ளார் அருகில் அவரது மனைவி இருந்துள்ளார். வேனில் உள் பகுதியில் இரும்பு பெட்டிகள், சாக்கு மூட்டைகள், கட்டில், போன்ற பொருட்களும் இருந்துள்ளது. அந்த வேனை கண்டு அப்பகுதியில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டு வேனை நிறுத்தியுள்ளனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

Advertisment

இதனால் சந்தேகம் ஏற்பட்டு சிலர் ஆங்காங்கே போன் செய்து சிலர் குழந்தைகளை கடத்தும் வெளி மாநில கும்பல் ஒன்று வேனில் சுற்றுவதாகவும் அந்த வேனில் குழந்தைகளை கடத்தி பெட்டியில் அடைத்து வைத்திருப்பதாகவும் அந்த வேன் இலுப்பூரை நோக்கி வருவதாகவும் செய்தி காட்டு தீயாக பரவியது.

இதனால் இளைஞர்கள் பலர் இலுப்பூர் அரசு மருத்துவமனை அருகே அந்த வேனுக்காக காத்திருந்தது. சில நிமிடங்கள் அந்த வழியாக வந்த வேனை சிலர் நிறுத்தியுள்ளனர். அதற்குள் இலுப்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வேனை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

குழந்தை கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளதாக தகவல் பரவியதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலுப்பூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் இலுப்பூர் கடைவீதி முதல் காவல் நிலையம் வரை பரபரப்பு ஏற்பட்டது.

பின்பு அங்கு கூடிய பொதுமக்கள் வேனில் உள்ளே குழந்தைகள் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டிக்கலாம் அதனால் பெட்டிகளை திறக்க வேண்டும் என சத்தமிட்டனர். இதனையடுத்து இலுப்பூர் டிஎஸ்பி மற்றும் விராலிமலை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் அன்னவாசல் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் வேனில் இருந்த அனைத்து பொருட்களையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். அதில் அவர்கள் சித்தா மருந்துக்கள் வியாபாரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து டிஸ்எஸ்பி தலைமையில் பலகட்ட விசாரணைக்கு பின்பு அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இலுப்பூர் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.