நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். ஏற்கனவே அந்தப் புலியால் அப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'டி23' என்று அழைக்கப்படும் அந்தப் புலியால் கால்நடைகள் பல கொல்லப்பட்ட நிலையில், புலியைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சந்திரன் என்பவர் 'டி23' புலி தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அதன்பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரன் கடந்த 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியைக் கண்டிப்பாகக் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என இதற்கு முன்பே பல போராட்டங்கள் நடைபெற்றும் புலியை தற்போது வரை பிடிக்கவில்லை என கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து வனத்துறை சார்பிலும் புலியைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடலூர், தேவன் எஸ்டேட் பகுதியில் மனிதர்களைத் தாக்கும் 'டி23' புலியைப் பிடிக்கும் வரை யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேவன் ஸ்டேட் பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவை வீடுகளுக்கே சென்று தர தரவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் அந்த பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்து சேவையைத் தற்காலிகமாக நிறுத்தவும் அறிவுறுத்தி உள்ளார் மாவட்ட ஆட்சியர்.