Skip to main content

நிற்காத ரயில்கள்; திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடத்த தீர்மானம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Non-stopping trains- decision to hold protest led by Thiruma

 

சிதம்பரத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் அப்துல் ரியாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் கம்பன் அம்பிகாபதி, பொருளாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் சிவராம வீரப்பன், நிர்வாகச் செயலாளர் கண்ணன், கூடுதல் செயலாளர் புகழேந்தி, சட்ட ஆலோசகர் ஸ்ரீதர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ் ஒளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சிதம்பரம் ரயில் நிலையத்தில், சாரதா சேது விரைவு ரயில், தாம்பரம் - செங்கோட்டை, காரைக்கால் - எழும்பூர் விரைவு ஆகிய ரயில்களைச் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கோவை - மயிலாடுதுறை மற்றும் மைசூர் - மயிலாடுதுறை ரயில்களைச் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எனவே வரும் 20-ம் தேதிக்கு மேல் விரைவில் சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்புவின் உருவபொம்மை எரிப்பு; காங்கிரஸ் போராட்டம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகிய நிலையில் இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்புவை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அதற்கு பதிலளித்த குஷ்பு, “உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” எனக் குறிப்பிட்டு விளக்கமளித்திருந்தார். சேரி மொழி என அவர் பயன்படுத்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள குஷ்பு, “பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இருப்பினும் குஷ்பு மீது தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று மாலை ஐந்து மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.

 

தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவு படுத்தி பேசியதாக புகார் கூறப்பட்ட நிலையில், நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று ரோந்து வாகனங்களும் அவர் வசிக்கக்கூடிய பகுதியைச் சுற்றி தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பட்டியலின மக்களை இழிவாக பேசியதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாசலில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Next Story

பெட்டி மாறி ஏறியதால் ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் செய்த விபரீத செயல்!

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

The ticket inspector did a perverse act because the train carriage changed by passengers

 

கேரளா மாநிலம், கண்ணூர் அருகே உள்ள பாப்பினிசேரி பகுதியைச் சேர்ந்தவர் பைசல். இவருக்கு சரிபா என்ற பெண்ணுடன் திருமணமாகி 17 வயதில் இரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் நான்கு பேரும் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் செல்வதற்காக நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் சாதாரண டிக்கெட்டை எடுத்து ரயிலில் ஏறினர்.

 

அங்கு பொதுப் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரிபாவையும் தனது மகளையும் முன்பதிவு பெட்டியில் ஏற்றிவிட்டு, பைசல் தனது மகனுடன் பொதுப் பெட்டியில் ஏறினார். அதன்பின், ரயில் மெதுவாக கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படத் தொடங்கியது. அப்போது திடீரென்று, சரிபாவும், அவரது மகளும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பைசல், உடனடியாகத் தனது மகனுடன் ரயிலை விட்டு கீழே இறங்கினார். மேலும், கீழே விழுந்த மனைவியையும், மகளையும் மீட்டு அவர்களிடம் விசாரித்தார்.

 

அப்போது, சாதாரண டிக்கெட்டுடன் முன்பதிவு பெட்டியில் ஏறியதால் டிக்கெட் பரிசோதகர் தங்களை கீழே தள்ளிவிட்டார் என்று சரிபா கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பைசல், இந்த சம்பவம் குறித்து கோழிக்கோடு ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் சரிபாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரை அழைத்துக்கொண்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பைசல் அனுமதித்தார். இதனையடுத்து, பைசல் அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.