பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை, வேளாண்துறை, தொழில்துறை என மொத்தம் 11 துறைகளைச் சார்ந்த 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால் வேளாண்மையை பாதுகாக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மையை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. மாநிலத்தின் 34 சதவிகித அரிசி உற்பத்தி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் என்றாலும் அதனை அமல்படுத்துகிறோம். உழவர்களிடம் இருந்து கருத்தை பெற்று வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு தொடர்ந்து சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொய்வில்லாமல் நடைபெறும். தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அரிசி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'' என்றார்.