Skip to main content

“எந்த அந்தரங்க படங்களையும்  வெளியிடவில்லை”- வாதிட்ட முன்னாள் அமைச்சரின் வழக்கறிஞர்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021
"No private pictures released" - Former Minister's lawyer argues

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார்  ஜூன் 20ம் தேதி கைது செய்தனர்.

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் அவருடன் நடிகை கணவன் - மனைவியாக வசித்துள்ளார். அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை. கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளார். கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தியதாக கூற முடியாது. எந்த அந்தரங்க படங்களையும் வெளியிடவில்லை என வாதிட்டார்.

 

புலன் விசாரணை முடிந்து விட்டது. ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகப் போவதில்லை. சாட்சிகளை கலைக்கப் போவதில்லை  எனவும் வாதிட்டார். புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து  செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத் துவங்கியதாகவும், சட்டமன்றத்துக்கும் மனைவி என சாந்தினியை அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரது ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும், நடிகைக்கு படங்களும், குறுந்தகவலும் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.