Skip to main content

என்.எல்.சி சுரங்கத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

 

nlc contract worker chelladurai electricity incident

 

கடலூர் மாவட்டம்  நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-ல் உள்ள எலக்ட்ரிக்கல் டிரான்ஸ்ஃபார்மர் பேனல் போர்டு (electrical transformer panel board) பகுதியில், கடந்த ஜூன் ஒன்றாம் தேதி, ஏர் வைபர் (Air wiber) மூலம் ஒப்பந்த தொழிலாளியான கல்லுக்குழி கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் விபத்து ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

 

அவரை மீட்ட சக தொழிலாளர்கள் என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 9 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செல்லதுரை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இச்சம்பவத்தினால் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.