மரணப்படுக்கையில் கிடக்கிறார் நித்தியானந்தா எனக் கூறப்பட்ட நிலையில், 'வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என நித்தியனந்தா கைப்பட எழுதியுள்ள கடிதம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சை வீடியோ ஒன்றால் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. இதையடுத்து, மதுரை ஆதினத்துடன் ஏற்பட்ட தகராறு, பாலியல் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளால், அவர் மீது குற்றச்சாட்டு கிராஃப் கிடுகிடுவென ஏறிக்கொண்டே போனது. இதன் தொடர்ச்சியாக, அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். இதனால், இந்தியாவை விட்டே தப்பியோடிய நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவில் அடைக்கலம் ஆனதாகச் சொல்லப்படுகிறது. தான் தங்கியிருக்கும் தீவுக்கு 'கைலாசா' எனப் பெயரிட்டு, அங்கிருந்தபடியே ஆன்லைன் சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார் நித்தியானந்தா. கைலாசாவை இந்து நாடு எனப் பிரகடனப்படுத்திய நித்தியானந்தா, குடிமகன்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டு, உலக மக்களை 'கைலாசா' நாட்டுக்கு வருமாறு, அழைப்பு விடுத்தார். ஆனால், உஷாராக முகவரியை மட்டும் குறிப்பிடாமல் தவிர்த்தார்.
நித்தியானந்தா காட்டில்தான் மழை என தமிழக இளசுகள் வயிற்றெரிச்சலை 'மீம்ஸ்' ஆக கன்வெர்ட் செய்து வெளியிட்டு வர, அதற்கும் பதில் சொல்லி அடுத்த வீடியோவில் கிறங்கடிப்பார் நித்தி. ஒருபக்கம் போலீஸுக்கு தண்ணி கட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் வெயிட்டான பக்தர்களையும் கைநழுவிச்செல்லாமல் பார்த்துக் கொள்கிறார் எனச் சொல்லப்பட்டது. கைலாச அதிபர், சுவாமியார், போலீசால் தேடப்படும் நபர் எனப் பன்முகம் கொண்ட நித்தியை யாராவது தவறாகப் பேசிவிட்டால், அவரது பெண் சீடர்கள் கொதித்துப் போய் பேஸ்புக் 'லைவ்'வுக்கு வந்துவிடுவார்கள். நித்தியை கேலி செய்தவர்களை கிழித்து கடுமையாக விமர்சிப்பார்கள்.
இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். 'நல்லா தானே இருந்தாரு' என சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என, அவர் கைப்பட எழுதிய கடிதமும் நித்தியானந்தாவின் புகைப்படங்களும் அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "பரமசிவனின் ஆசிகள்! நான் இறந்துவிட்டதாக பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவர்களாலும் எனது நிலையயை அறிய முடியவில்லை. இதுவரை என்னை சுற்றியுள்ளவர்களின் பெயர்கள் மற்றும் நினைவுகளை முழுதாக அறிந்துகொள்ள முடியவில்லை. நான் சாகவில்லை. சமாதியில் இருக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். இதனால், அவரது பக்தர்கள் சுவாமிக்கு என்னானதோ எனும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.