தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், தற்பொழுது நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கில் வணிக வளாகம், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களுக்குத் தடை. இரவு நேர ஊரடங்கில் மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு அனுமதி. ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதப்பட உள்ள 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும். பொது பேருந்துகளில் 50 சதவிகித பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஞாயற்று கிழமை முழு முடக்கத்தின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.