வடிவேல் ஒரு திரைப்படத்தில் மது கடையில் புகுந்து சரக்கை ருசி பார்த்து விட்டு, போலிச்சரக்கு என்பதை கடை உ ரிமையாளருக்கே போன் போட்டு சொல்லி வர வைத்து பணத்தை திருடிக் கொண்டு தப்பி செல்வார். அது போல் நெய்வேலியில் மளிகை கடையில் ஒரு நிஜ திருடன் செய்த வித்தியாசமான வேலையை பாருங்கள் உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா?" கடிதம் எழுதி வைத்து குரங்கு வேலை செய்த திருடன் நெய்வேலியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் ஜெயராஜ். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கடையை திறந்து பார்த்த போது கடையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கல்லாவில் பணம் இல்லாததால், ஆத்திரமடைந்து கடையில் இருந்த அரிசி மூட்டை, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்தும், பொருட்களை வாரி இறைத்தும் சென்றுள்ளார்.
மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் " உயிரை பணம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை" என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஜெயராஜ் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து லெட்டர் எழுதி வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.