கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்.எல்.சி அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமைத் தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், புவனகிரி அருண்மொழிதேவன், கடலூர் ஐயப்பன், காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல்வன் மற்றும் வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், "உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச சரியீட்டுத் தொகையாக ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு கொடுத்த உரிமையாளர்களுக்கு சுமார் 72 லட்ச ரூபாய் வரை அளிக்கப்படவுள்ளது. அதாவது நில மதிப்பு, வேலைவாய்ப்புக்கான ஒரு முறை பணப்பலன், வீட்டின் மதிப்புத் தொகை மற்றும் இதர மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான பணப்பலன் உள்ளிட்டவை சேர்த்து ஒட்டுமொத்த பணப்பலன்களாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தியதற்கு சரியீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 லட்சம் என முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட படி, தற்போது தமிழ்நாடு அரசு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 லட்சம் என நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை கூடுதல் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி ஆகிய கிராமங்களில் 548 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 29 நபர்களுக்கு ரூபாய் 15.68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நில எடுப்புப் பணிகள் குறித்து மக்கள் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்காக என்.எல்.சி நிர்வாகம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் மையம் ஒன்றை தனியாக விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நில எடுப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் சமூகப் பொறுப்புணர்வுக்கான நடவடிக்கைகளுக்கு என்.எல்.சி நிர்வாகத்திடமிருந்து ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டதன் பேரில் என்.எல்.சி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நிலம் கொடுத்த உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவர் என்ற வகையில் 1000 நபர்களுக்கு ஒப்பந்த முறை பணிகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே என்.எல்.சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், மேலும் நிலம் கொடுக்கும் உரிமையாளர்களின் குடும்பத்தில் உள்ள டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்த இளைஞர்களுக்கு தொழிற்கல்விக்கான பயிற்சிகள் 3 ஆண்டுகள் வழங்கி சுமார் 500 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அடுத்த 4 ஆண்டுகளில் வழங்க வழிவகை செய்யப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட 192 பணிகளுக்கான வேலைவாய்ப்பிலும், தற்போது வெளியிடப்பட இருக்கும் 150 பணிகளுக்கான வேலைவாய்ப்பிலும் நிலம் வழங்கிய உரிமையாளர்கள் குடும்பத்தில் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு 20 போனஸ் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலமாக நிலம் கொடுத்த உரிமையாளர்களில் பெரும்பாலானோர் நிரந்தர வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
கூட்டம் தொடங்கியவுடன் கரிவெட்டி, கத்தாழை, முத்துகிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு வந்திருந்தனர். விவசாயிகளை போலீசார் மண்டபத்துக்கு உள்ளே விட மறுத்ததால் வடலூர் - பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், ‘விவசாயிகளை அனுமதிக்காததால் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி’ வெளியேறினார். புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், நிரந்தர வேலை; ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு; குழு அமைக்க வேண்டும்; ஆர் அண்ட் ஆர் பாலிசியை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசிவிட்டு வெளியேறினார்.