Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருவர் பலி!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

கடலூர் அடுத்த மேல்பாதி அம்பேத்கர் நகரைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அம்பேத்கர் நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது மேல்பாதி காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு கஞ்சா போதையில் அப்பகுதியில் பெரும் கூச்சலிட்டு உள்ளனர். 

 

New Year celebrations incident


இவர்களிடம் வேல்முருகன் என்பவர் 'இங்கு வந்து ஏன் சத்தம் விடுகிறீர்கள்? உங்கள் பகுதிக்கு சென்று எதுவென்றாலும் செய்து கொள்ளுங்கள்' என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில் இன்று காலை மேல்பாதி பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள முட்புதரில் வேல்முருகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் வடலூர் அருகேயுள்ள நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரை சேர்ந்தவர் காந்தாராவ் (55), அ.தி.மு.க பிரமுகர். இவர் என்.எல்.சி சொசைட்டியில் வேலை பார்த்து வந்தார். செல்வகுமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் அருள்(20) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் மைக்செட் வைத்து விழா நடத்தினார்கள். இந்த விழாவில் காந்தாராவ் மகன் செல்வகுமார், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கேக் வெட்டுவதற்காக காந்தாராவ் வீட்டில் இருந்து சிலர் பெஞ்சை அங்கு தூக்கிகொண்டு வந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே தனது மகன் செல்வகுமார் புத்தாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கும் தகவல் காந்தாராவ்வுக்கு தெரியவந்தது. உடனே அவர் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கிருந்த தனது மகன் செல்வகுமாரை வீட்டிற்கு வரும்படி அழைத்தார். மேலும் அங்கு கேக் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த தனது வீட்டின் பெஞ்சை தூக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற வாலிபர்கள் கேக்வெட்டும் முன்பே பெஞ்சை ஏன் தூக்குகிறீர்கள் என்று தட்டிகேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த வாலிபர்கள் திடீரென்று அவரை தாக்கினர். கல்லாலும் அங்கிருந்த கட்டையாலும் காந்தாராவ் நெஞ்சில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நெஞ்சை பிடித்தபடி வீட்டிற்கு சென்றபோது கீழே விழுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் காந்தாராவ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக அந்தபகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அருள், ரஞ்சித்குமார் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொலைகளில் முடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்