Skip to main content

புதிய யு.பி.எஸ் உபகரணம் வெடித்து தீ விபத்து; நகைகள், பணம் தீயில் எரிந்து நாசம்!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

New UPS equipment  fire; Jewelry, money destroyed by fire!

 

கொங்கணாபுரம் அருகே, புதிதாக வாங்கிய யு.பி.எஸ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம், ஆவணங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின. 


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி, பெரிய கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுத்து (54). விசைத்தறி தொழிலாளி. கோடைக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் அதை சமாளிக்க, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக யு.பி.எஸ் உபகரணம் வாங்கியிருந்தார். சனிக்கிழமை (ஏப். 23) இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு, சின்னமுத்து, அவருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோர் தூங்கச் சென்றனர். 


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) அதிகாலை 3.15 மணியளவில், வீட்டின் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரி திடீரென்று வெடித்துச் சிதறியது. அந்த உபகரணங்களில் இருந்து பறந்த தீப்பொறி, அறைக்குள் இருந்த பொருள்களில் பட்டதால் அவையும் தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. 


யு.பி.எஸ் வெடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சின்னமுத்து, பக்கத்து அறையில் தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டை விட்டு பத்திரமாக வெளியே ஓடிவந்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்த இடைப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிகழ்விடம் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அங்கு கூடிவிட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 


இந்த தீ விபத்தில் யு.பி.எஸ் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த பாத்திரங்கள், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வீட்டு பத்திரங்கள், துணிமணிகள் ஆகியவை முற்றிலும் தீக்கிரையாயின. இவற்றின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும். 


இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் லெனின், வருவாய் அலுவலர் நதியா, கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, கொங்கணாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 


சின்னமுத்துவும், குடும்பத்தினரும் வேறு அறையில் தூங்கியதால் உயிரிழப்பு அபாயம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.