Skip to main content

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
A new species of butterfly discovered in the Western Ghats

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் என்னும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும்.

இந்த புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனத்திற்கு மேகமலையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம் மலை என்று பொருள்படும். தேனியைச் சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்.காலேஷ் சதாசிவம், எஸ்.இராமசாமி காமையா மற்றும் டாக்டர்.சி.பி.ராஜ்குமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

"என்டோமான்" என்னும் அறிவியல் ஆய்வு இதழில் இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் வகை எண்ணிக்கை மொத்தம் 337ஆக உயர்ந்துள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 40 வகையும் அடங்கும். தமிழக முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் ஆனந்த், கள இயக்குநர் பத்மாவதி ஆகியோர் உதவியுடன் ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.