கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்து சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேவாலய தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபரை ஜமேசா முபீன் சந்தித்துள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பல நூறு பேர் பலியாகினர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுள்ளனர். அதில் ஒருவரான முகமது அசாருதீன் என்பவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜமேசா முபீன், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளா சிறையில் உள்ள முகமது அசாருதீனை சந்தித்ததாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கேரளா சிறை வளாகத்தில் உள்ள வருகை பதிவேட்டின் அடிப்படையில் கண்டறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.