Skip to main content

12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு... கிராம மக்கள் உற்சாகம்!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

 New deep well valued at Rs 12 lakh ... Villagers are excited!

 

சிதம்பரத்தை அடுத்துள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் உள்ள செல்வகணபதி நகர், தாயம்மாள் நகர், சரஸ்வதி அம்மாள் நகர், பசுல் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதைப்போக்க அங்கு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி நிதியிலிருந்து இந்தப் பகுதியில் சுமார் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சுமார் 650 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை, சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் கருணாநிதி, ஊராட்சி  செயலாளர் பாபு, பாரதிதாசன் சமூக நலச்சங்க தலைவர் செயபாலு, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் கருணாநிதி, சமூக ஆர்வலர் குறிஞ்சிவளவன், ஓய்வு பெற்ற பொறியாளர் பழனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.

 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.