சிதம்பரத்தை அடுத்துள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் உள்ள செல்வகணபதி நகர், தாயம்மாள் நகர், சரஸ்வதி அம்மாள் நகர், பசுல் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதைப்போக்க அங்கு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி நிதியிலிருந்து இந்தப் பகுதியில் சுமார் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சுமார் 650 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை, சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் பாபு, பாரதிதாசன் சமூக நலச்சங்க தலைவர் செயபாலு, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் கருணாநிதி, சமூக ஆர்வலர் குறிஞ்சிவளவன், ஓய்வு பெற்ற பொறியாளர் பழனிசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.